முகப்பு          |          எங்களைப்பற்றி          |          சிறப்பம்சங்கள்          |          சபரி ஜாதக மென்பொருள்          |          தொடர்பு முகவரி

1. அயனாம்சம்:
வாசக அன்பர்களே! நமது சபரி பஞ்சாங்கமானது மறைந்த ஜோதிட கணித மேதையும் பஞ்சாங்க கர்த்தாக்களின் மூலவரும் எனது மானசீக குருவுமாகிய ஜோதிட பூஷணம் தெய்வத்திரு. C.G.ராஜன் அவர்களது அயனாம்சத்தைப் பின்பற்றி கணிக்கப்பட்டதாகும்.இது ஆனந்தபோதினி பஞ்சாங்கம் தொடங்கிய காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் அயனாம்சத்திற்கு (1979 க்கு முன்பு வரை) நெருக்கமான அளவு உடையதாகும். இதுவே சரியான திருக்கணித அயனாம்சம் ஆகும். இந்த அயனாம்சத்தைப் பின்பற்றிக் கணிக்கப்படும் பஞ்சாங்கமே சுத்த திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.18 சித்தாந்தங்களை உருவாக்கியவர்களான நமது முன்னோர்கள் அயனாம்சத்திற்கென்று சில விதிகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவையாவன: சிருஷ்டியாதி காலத்தில் மேஷாயனமும் மேஷ ராசி ஆரம்ப ஸ்தானமும் சமமாக 0 பாகையில் இருந்தன. பின்னர் அது ஆண்டு தோறும் மேற்குநோக்கி சலனப்பட்டு 27 பாகை வரை செல்லும். பின்னர் அங்கிருந்து படிப்படியாக குறைந்து கிழக்கு நோக்கி நகர்ந்து 0 பாகையை வந்தடையும்.இதற்கு 3600 ஆண்டுகளாகும். பின்னர் இதுபோலவே கிழக்கு நோக்கி 27 பாகை வரை நகர்ந்து மீண்டும் அங்கிருந்து படிப்படியாகக் குறைந்து மேற்கு நோக்கி நகர்ந்து 0 பாகையை அடையும். இதற்கு 3600 ஆண்டுகள் ஆக மொத்தம் 7200 ஆண்டுகள் ஒரு சலனத்திற்கு ஆகும். இது போல் ஒரு மாகாயுகத்தில் 600 முறை சலனப்படும். இவ்வாறு சலனப்படும் 27 பாகை வரையிலான தூரமே அயனாம்சமாகும்.எனவே அயனாம்சமானது 27 பாகைற்கு மேற்படாது. அயனாம்சம் 27 பாகையை அடைந்தவுடன் 26.59, 26.58 எனக் குறையத் தொடங்க வேண்டும். இந்த விதியினை முழுமையாகப் பின்பற்றும் அயனாம்சம் நமது அயனாம்சம் மட்டுமே. வேறு எந்த அயனாம்சமும் மேற்கண்ட விதிகளைப் பின்பற்றவில்லை.

இது பற்றி நமது சித்தாந்தங்களின் கூற்றை இங்கே ஆதாரமாகத் தருகிறோம். பிரம்ம சித்தாந்தத்தில்

ப்ரத்யக்சலச்ச மேஷாதௌ துலாதௌ ப்ராக்சலோபவேத்
கர்க்யாதிஸ்தா ம்ருகாதிஸ்தாஸ் ஸ்ருஷ்டேருத கவாங்முகம்
ப்ரத்யப்தம் யாந்தியாம் யோதக் கமகே விஹிதேபியத்
தத்பச்சாத்சலிதம் சக்ரம் உபசாரோ யமித்யபி
தத்தத்பச்சால்ல வக்ராந்தி ப்ரஸங்கா தத்ரித்ருக்லவாத்
ததோந்யதாதப்ரத்யப்தம் கிஞ்சித்கிஞ்சித் வ்ரஜந்த்யபி
தத்தத்ப்ராகம்சக க்ராந்தி ப்ரஸங்கேந நிஜாஸ்பதாத்
பச்சிமாம்சக்ரமப்ராப்தே ப்ராக்சக்ரம் சலிதம்ஹிந
யாவத்ஸ்ருஷ்ட்யாதி நிர்திஷ்ட ஸதாநம்தாவத் வ்ரஜந்திதே.

மேறகண்ட ஸ்லோகத்தில் இந்த விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை தாங்கள் அறியலாம். சூரிய சித்தாந்ததில் த்ரிம்ஸத் க்ருத்யோ யுகேபாநாம் சக்ரம்ப்ராக் பரிலம்பதே என்று தொடங்கும் ஸ்லோகத்திலும், சோமசித்தாந்தத்தில் யுகேஷட் சதக்ருத்வோஹி பசக்ரம்ப்ராக் விலம்தே என்று தொடங்கும் ஸ்லோகத்திலும் இந்த விபரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

அதுபோன்றே அயனகதிக்கும் சலனம் உண்டு என்பதே நமது முன்னோர்களின் கூற்றாகும். அயனகதியானது ஆண்டுதோறும் ஒரே சீரான மாற்றத்தை அடையவதில்லை. சில அயனாம்சங்களில் ஆண்டுதோறும் அயனகதி 50.26 விகலையாகவே வைத்துக்கணிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அயனகதியானது ஆண்டுதோறும் சுமார் 0.0002விகலை அளவிற்கு சலனத்தை அடைகிறது.

எனவெ மேற்கூறப்பட்டுள்ள விளக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்தால் நமது பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அயனாம்சமும் கணிதங்களும் நமது முன்னோர்கள் சொல்லிய விதிகளை முறையாகப் பின்பற்றி இருப்பதையும் மிகவும் துல்லியமானது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

2. முகூர்த்தம் :
நமது பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த நாட்கள் முகூர்த்தத்திற்கு உகந்த நாட்கள் என்பது பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் திருமணம், வித்யாரம்பம், உபநயனம், பெண் பார்த்தல், பூமுடித்தல், காது குத்தல், முடிவாங்கல், பெயர் சூட்டல், சாதம் ஊட்டல், தொழில் துவங்குதல், புதுக்கணக்குப் போடுத்ல், நிச்சயதார்த்தம், மாங்கல்யம் செய்ய, கிரக பிரவேசம், கிரக ஆரம்பம் - நிலைப்படி வைக்க, தெய்வப்பிரதிஷ்டை (குட முழுக்கு) ஆகியவற்றிற்குத் தனித்தனியே சிறந்த முகூர்த்த நாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. முகூர்த்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளையும் விதிவிலக்குகளையும் முழுமையாகப் பின்பற்றியே முகூர்த்த நாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி மாலை நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் கூட முகூர்த்த நேரம் கொடுக்கப்பட்டுள்ளன.

3. பாதசாரங்கள்:
பாதசாரங்களில் கிரகங்கள் அடுத்த பாதங்களுக்குப் பெயர்ச்சியாகும் நேரம் நாழிகை விநாடிகளில் மட்டுமல்லாது மணி நிமிடங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

4.நட்சத்திரத் தியாஜ்ஜியம் மற்றும் அமிர்தகடிகை :
ஒவ்வொரு நாளுக்கும் திதி நட்சத்திர யோக கரண முடிவு நேரங்கள் மட்டுமல்லாது சுபகாரியங்களை விலக்க வேண்டிய விஷ நேரமான நட்சத்திரத் தியாஜ்ஜிய நேரம் மற்றும் சுபகாரியங்களைச் செய்யக் கூடிய நேரமான அமிர்தகடிகை ஆகியவற்றிற்கு மணி நிமிடங்களில் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

5. கிரகஸ்புடங்கள் :
கிரக ஸ்புடங்களில் ராகுவிற்கு மத்திம ஸ்புடமும் சுத்த ஸ்புடமும் நாள்தோறும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதிக்கும் அயனாம்சம் மற்றும் (Obliquity, Delta T) ஆகியவை கிரக ஸ்புட பக்கத்தில் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

6. உலக நாடுகளுக்கான நேரத்திருத்தம் :
உலகிலுள்ள சில முக்கிய நாடுகளுக்கான நேரத்திருத்தங்கள் மற்றும் அந்நாடுகளில் பயன்படுத்தப்படும் Daylight saving Time பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

7. மாந்தி ஸ்புடம் மற்றும் பாதசாரம் :
ஒவ்வொரு நாளுக்கும் பகல் இரவு இரண்டு வேளைக்கும் மாந்தியின் ஸ்புடமும் பாதசாரமும் கொடுக்கப்பட்டுள்ளன. இது வேறு எந்தப் பஞ்சாங்கத்திலும் இல்லாததாகும்.

8. கிராந்தி விக்ஷேபம் மற்றும் நட்சத்திர ஹோராமணி :
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருடம் முழுவதும் கிராந்தி விக்ஷேபம் மற்றும் நட்சத்திர ஹோராமணி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இவையும் வேறு பஞ்சாங்களில் கொடுக்கப்படாத விஷயங்களாகும்.

9. ஆகாயக்காட்சி :
இது 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
1. சமாகமங்கள் - சந்திரனோடு இதர கிரகங்கள் ஒரே பாகை கலையில் சேரும் நேரம்.
2. உவா மற்றும் உவாந்தங்கள் - சூரியனோடு இதர கிரகங்கள் ஒரே பாகை கலையில் சேரும் நேரம் மற்றும் 180வது பாகையில் சேரும் நேரம்.
3. கிரகச்சேர்க்கை - கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஒரே பாகை கலையில் சேரும் நேரம்.
4. கிரகங்களில் ஏற்படும் கிரணங்கள்.
5. பூமிக்கு அருகில் வரும் கிரகங்கள் ஆகியவை பற்றிய விபரங்கள்.

10. லக்ன முடிவு நேரம் :
ஒவ்வொரு நாளும் 12 லக்னங்களும் முடியும் நேரங்கள் மணி நிமிடடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு கணிக்கப்பட்டுள்ளது. இதர ஊர்களுக்கான திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.

11. உபக்கிரக ஸ்புடங்கள் :
தூமாதி ஐவர் மற்றும் காலனாதி ஒன்பதின்மர் ஆகிய 14 உபக்கிரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் பகல் இரவு இரு வேளைகளுக்கும் ஸ்புடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.